Saturday, August 20, 2011

பதுவாக்கள் பின்னப்பட்ட இரவுகள்

ஆயிரம் ஆயிரம் பதுவாக்களை சுமந்து அலைகிறது காற்று.
முஜாபுத் தஃவாக்களைக் கொண்டும்
கடவுளை மூச்சு நுணியில் தரிசிக்கிற நொடிகளை களவு கொடுத்தவர்களைக் கொண்டும்
நித்திரையைத் தொலைத்த ஆபிதுகளைக்கொண்டும்
மறு நாள் சோற்றுக்காசை நேத்திரவில் தவற விட்ட மிஸ்கீன்களைக் கொண்டும்
முஸாபிருகள், பக்கீருகள் என எல்லா வகை மள்லூம்களைக் கொண்டும்
தொழுகைப் பாயிலும்,  மிஹ்ராபிலுமாக பதுவாக்கள் நெய்யப்பட்டுள்ளன


எங்கள் அமைதியான சுஜூதுகளில் மண்ணெறிந்த பேய்களும்
பெண்கள்,சிசுக்கள், மூத்தம்மா, அப்பாமார், அண்ணாச்சி, அக்காமார்.. எல்லாரின் நித்திரையிலும் பயம் அள்ளியெறிந்த காவாலிகளும்
என் மாதரின் மாரிலும், தோளிலும் விரல்  நீட்டிய ஹறாங்குட்டிகளும்
கிறீஸ் பூசிய, பூசச்சொன்ன, பூசிவிட்ட், பூசுகையின் விபரம் அறிந்து சும்மா இருக்கும் எல்லா நாய்மார் களும்,

புழு பிடித்தும்,
இரத்தம் கக்கியும்,
பைத்தியம் பிடித்தும் பிரண்டு போக ஆயிரம் பதுவாக்கள்.....



வம்சம் இழந்தும்,
நடுரோட்டில் சீரழிந்தும்,
நாய்களோடும் பேய்களோடும் நாறித்திரிய ஆயிரம் பதுவாக்கள்.....




திட்டம் போட்டவன், போட்டுக் கொடுத்தவன், ஆக்கள் சேத்தவன், காசு கொடுத்தவன் - மொத்தக்கூட்டணியும்
மண்டலே கசால் வந்து மண்டை வெடித்து சாக ஆயிரம் பதுவாக்கள்......



ஆண்டவனே, ரஹ்மானே, காப்பவனே, அழிப்பவனே
உன்னோடு இருக்கவென வந்த போது எங்கள் இரவுகளில் கிறீஸ் பூசிய இவன்மார் எல்லோரயும் அழித்தருள மண்றாடுகிறோம் றஹ்மானே!!!


எல்லா இரவிலும் பதுவாக்களே பின்னப்பட்டதாய்
மலக்குகள் ஏடுகளில் பதியட்டும்..
இந்த மள்லூம்களின் பதுவாக்களுக்கு அவர்களூம் ஆமீன் பறையட்டுமாக!!



எங்கள் புள்ளடிகளால் ஆளானவர்களே..
எங்கள் ஆணை வாங்கி வெள்ளையும், நீள‌முமாய் ஆடையணிந்த நிர்வாணிகளே..
உங்களுக்கு மட்டும் ஒரு துண்டு துஆ மேலுயர‌க்கேட்டது..

"ஒரு சொட்டு ஈமானாவது அவர்களுக்கு மிச்சமிருக்கட்டும் றஹ்மானே"
" எங்கள் பதுவாக்களின் நாக்குகள் அவர்களைத் தீண்டாதிருக்கட்டும் படைச்சவனே"

اللهم احفظ عباكد و بني عباكدك
اللهم انصر نا علي من ظلمنا
اللهم شتت شملهم وفرق جمعهم والق الرعب علي قلوبهم
اللهم انت يا خير الماكرين رد كيدهم علي انفسهم
اللهم احفظ نسائنا وصغارنا وكبارنا من كيد الماكرين وشر المنافقين
اللهم انت الغني و نحن الفقرآء اليك.......
اللهم ول علي المسلمين خيارهم ولا تول شرارهم برحمتك يا أرحم الراحمين